expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி: இந்தியா 566 ரன்கள் குவிப்பு

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி
ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.இந்த நிலையில் 2–வது நாளான நேற்று முன்தினமும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி 200 ரன்கள் (283 பந்து, 24 பவுண்டரி) விளாசி கேட்ச் ஆனார். இது தான் அவரது முதல் இரட்டை செஞ்சுரியாகும். அத்துடன் வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார்.

விராட் கோலிக்கு பக்கபலமாக நின்ற அஸ்வின், கோலி ஆட்டம் இழந்ததும் பொறுப்பை சுமந்தார். மறுமுனையில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தனது பங்குக்கு 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய அமித் மிஸ்ராவும் நிலைகொண்டு விளையாட, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் சோர்ந்தே போனார்கள்.

அஸ்வின் சதம்:
கைதேர்ந்த பேட்ஸ்மேன் போன்று ஆடிய அஸ்வின், பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 3–வது சதத்தை நிறைவு செய்தார். அப்போது அணியும் 500 ரன்களை கடந்தது. 43 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த அஸ்வின், இதுவரை பெற்றுள்ள 3 சதங்களும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்தவையே என்பது குறிப்பிடத்தக்கது.
அணியின் ஸ்கோர் 526 ரன்களாக உயர்ந்த போது, அஸ்வின் 113 ரன்களில் (253 பந்து, 12 பவுண்டரி) தூக்கியடித்து கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் 4–வது அரைசதத்தை கடந்த அமித் மிஸ்ரா 53 ரன்களில் (68 பந்து, 6 பவுண்டரி) அவுட் ஆக, அத்துடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.

இந்தியா 566 ரன்:
இந்திய அணி 161.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முகமது ஷமி 17 ரன்களுடன் (9 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வெஸ்ட இண்டீஸ் மண்ணில் இந்தியாவின் 2–வது அதிகபட்சமாகவும் (2006–ம் ஆண்டு செயின்ட் லூசியாவில் 588 ரன்கள் இந்தியா எடுத்துள்ளது) இது அமைந்தது.
மேலும் இந்த டெஸ்டில் இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. 2–வது முதல் 7–வது விக்கெட் வரை ஒவ்வொரு ஜோடியும் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. 2008–ம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக இவ்வாறு செய்திருந்தது. அதன் பிறகு இப்படியொரு வித்தியாசமான சாதனையை நிகழ்த்தி காட்டிய அணி இந்தியா தான்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தேவேந்திர பிஷூ, கிரேக் பிராத்வெய்ட் தலா 3 விக்கெட்டுகளும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் சந்திரிகாவின் (16 ரன்) விக்கெட்டை இழந்து 16 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்திருந்தது.

வழக்கமாக 7 அல்லது 8–வது பேட்டிங் வரிசையில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த 29 வயதான அஸ்வின் இந்த டெஸ்டில் முன்கூட்டியே 6–வது வரிசையில் இறக்கப்பட்டார். அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி அவரும் சதம் அடித்து அசத்தி விட்டார். 2–ம் நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய அணிக்காக டாப்–7 வரிசைக்குள் பேட் செய்ய வேண்டும் என்பதே எப்போதும் எனது விருப்பம். அது தான் எனது நீண்ட கால லட்சியமாகும். அதற்காக முயற்சித்து வருகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து முன்கூட்டியே களம் இறக்க முடிவு செய்த பயிற்சியாளர் அனில் கும்பிளேவுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கு முன்பும் சில சமயம் உண்மையிலேயே சிறப்பாக பேட் செய்திருக்கிறேன். ஆனால் அப்போது முன்வரிசை வாய்ப்பு கிடைத்ததில்லை.
காலையில் கோலி என்னை அழைத்து, விருத்திமான் சஹாவுக்கு முன்பாக நீங்கள் 6–வது வரிசையில் ஆட போகிறீர்கள் என்று கூறினார். அது எனது பேட்டிங் நம்பிக்கைக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது. சென்னையில் ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அதற்கு பலன் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது’ என்றார்.
6 அல்லது அதற்கு பின்வரிசையில் இறங்கி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3 சதங்கள் அடித்த 2–வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். ஏற்கனவே கபில்தேவும் இதே போன்று 3 சதங்கள் அடித்துள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில், ‘முதல்முறையாக இரட்டை சதத்தை எட்டியது, இனிமையான உணர்வை தருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். ஆனால் அந்த தொடர் (2011–ம் ஆண்டு) எனக்கு மறக்க முடியாத தொடராக அமையவில்லை. மீண்டும் இங்கு வந்து இப்போது இரட்டை சதம் எடுத்திருப்பது மிகுந்த மனநிறைவை தருகிறது.
மிகப்பெரிய சதங்கள் விளாசக்கூடிய திறமை எனக்கு உண்டு என்பதை அறிவேன். முதல்தர கிரிக்கெட் உள்பட எல்லாவற்றிலும் எனது முதல் இரட்டை சதம் இது தான். இச்சாதனையை செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அந்த இலக்கை தற்போதை கடந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கும், ஒட்டுமொத்த அணிக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் அது நிறைய திருப்தியை கொடுக்கும். அதை விட பெரிது எதுவும் கிடையாது. 5 பிரதான பேட்ஸ்மேன்களுடன் இறங்குவதால் கொஞ்சம் நெருக்கடி தான். ஆனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். ஒரு விஷயத்தை நான் முதலில் செய்து விட்டு, அதன் பிறகு அதை வீரர்களை செய்ய சொல்வேன். என்னால் முடியாததை ஒரு போதும் வீரர்களிடம் கேட்க மாட்டேன். கேப்டனாக எனது பாணி அது தான்’ என்றார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Powered By Blogger